.....................................
ஓ..... ரேசன் கடை
ஈன்ற தாயின் இருமல் சத்தம் ...
என் முகம் தவிர ...
(25)
என்ன கேட்டாய்
உன் வீட்டில்
என்ன செய்தாய்?
எதெடுத்து என்ன பார்த்தாய்?
எதைக் கிழித்து
வாங்கிக் கொண்டாய்
அடி உதைகள்
கெட்டுப்போன பிள்ளைக்கு
வெளியில் கிடைக்கும்
அடி உதைகள்
கெட்டுப் போகா பிள்ளைக்கு
வீட்டில் கிடைக்கும் முன்கூட்டி
அவர்கள் அவர்கள்
பங்குக்கு
உதைகள் வாங்கும்
காலத்தில்
உனக்கு மட்டும்
கிடைத்தாற்போல்
சின்னக் கண்ணா
அலட்டாதே.....
(26)
மொழி பெயர்ப்பு
நாங்கள் பாடும் மீன்கள்
நிறையத் தடவை வலைகளைக் கிழித்திருக்கிறோம்
அப்புறம் விருந்து மேசைகளில் பரிமாறப்ப்பட்டிருக்கிறோம்
நாங்கள் எவ்வளவு சுவையானவர்கள்....!
ஆனால் எங்கள் பாடல்களில் எலும்புகள் உண்டு
உங்கள் தொண்டையை
அடைத்து விடுவதற்கு ஒருநாள் வருவோம் ...!
(27)
படி
வேலை தேடு
மணந்து கொள்
குழந்தை பெறு
குடும்பத்தோடு
சினிமாவுக்குப் போ
சொத்து சேர்
சுகமாயிரு
அடுத்தவனுக்காக
அலட்டிக் கொள்ளாதே
உனக்குக் கஷ்டமா
நொந்து கொள்
மூச்சு விடாதே
தவறினால்
நீ
தறுதலை....
(28)
அவர்கள் போட்ட மாலைகளை
நான் மேடையிலேயே
விட்டு விட்டு வந்தேன்
என் பாடல்களை
அவர்கள் பத்திரப்படுத்தினார்கள்
(29)
நிலவே உன்னிடமிருந்து
வெளிநாட்டவர்கள்
கல்லெடுத்து வருகிறார்கள்
நாங்களோ இன்னமும்
அரிசியிலேயே கல்லெடுத்துக்
கொண்டிருக்கிறோம்...
(30)
பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
ஆன மனிதர்களைப்பார்த்து
சிலிர்த்துக்கொண்டது
முள்ளம்பன்றி..
ஒ....
இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர் ஆயுதமென்று..?
(31)
வாழ்வின் மடியிலிருந்து
சருகுகளாய் உதிர்வதை விட
மரணத்தின் மடியிலிருந்து
விதைகளாக சிந்தலாமே..?
(32)
பேனாக்களே
கிரீடங்களைக் கழற்றிவிட்டு
தலை குனியுங்கள்
நீங்கள் இருப்பது
தாள்களுக்காக -
பைகளுக்காக அல்ல
(33)
அடித்தளத்தை உலுக்கும்
பாட்டாளிப் புரட்சியில்லாமல்
எந்த
டோட்டல் புரட்சியும்
இந்த
சமூக முனை மயிரைக்கூட
அசைக்காது..
(34)
அக்கா அக்கா என்று அழைத்தால்
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே ...?
(35)
இந்த இரவின்
நட்சத்திரங்கள்
எங்கே போச்சு?
இந்த மரத்தின்
பூக்களெல்லாம்
ஏன் கருகிற்று?
கண்களுக்கு
இரண்டு நாள் பட்டினியை
ஜீரணிக்க முடியவில்லையோ?
(36)
எதனை கற்களை
என் காலிடறிற்று?
ஒன்றிலேனும்
அகலிகை அகப்படவில்லை
என் பெயரும் இராமன்தான்...!
(37)
காளியம்மா காளியம்மா
ஏன் நாக்கை நீட்டுகிறாய்
நான் என்ன டாக்டரா?
(38)
நாங்கள் வெயிலை தாங்குவது
எப்படித் தெரியுமா?
வெயிலில் பொசுங்கி
நாங்கள் மழைக்கு ஒதுங்குவது
எப்படித் தெரியுமா?
மழையில் நனைந்து
நாங்கள் பசியை விரட்டுவது
எப்படித் தெரியுமா?
பட்டினி கிடந்து
நாங்கள் நோயை ஒழிப்பது
எப்படித் தெரியுமா?
செத்துத் தொலைந்து
நாங்கள் யார் தெரியுமா?
(39)
நிலா
விட்டெறிந்த இட்டிலியோ
கட்டிவைத்த பழஞ்சோறோ
கொட்டி வைத்த கப் தயிரோ
சுட்டு வைத்த அப்பளம்தானோ
என்ன இழவேயானாலும்
கிட்ட வந்து எட்டவில்லை
பாடுபட்ட பாட்டாளி
கொட்டாவி விடுகின்றேன்
(40)
விடுதலை
எங்கள் விலங்குகள்
கழற்றப்படவில்லை
சாவிகளதாம்
கைமாறின...
(41)
கடவுள்
உலகக் கட்டிடத்தை
கோணலாகக் கட்டிய
அனுபவமற்ற கொத்தனார்
(42)
தேசத்திற்கு நாம் கிடைத்து விட்டோம்
ஆனால் இன்னும்
தேசம் நமக்குக் கிடைக்கவில்லை
(43)
கரடி
சைக்கிள் விடும்போது
நாம்
வாழ்க்கையை
அர்த்தப்படுத்த முடியாதா?
(44)
கனவுகளையல்ல
யதார்த்தத்தை
காதலிக்கக் கற்றுக்
கொள்வோம் முதலில்
வானமும்
சந்திர சூரியனும்
எங்கேயும் போய் விடாது
வாழ்க்கைதான்
ஓடி ஒளிந்துகொள்ளும்
(45)
புரட்சி என்பது
பொதுமக்களின் திருவிழா
என்ற நெருப்பு வரிகளை
நினைவுபடுத்திக்கொள்
ஒப்பாரி வைப்பதற்கு
நாம் ஒன்றும் கூடவில்லை
மாரடிப்பவர்களே
வழியை விட்டு விலகுங்கள்
ஓலமிடுபவர்களே
ஓரம் போங்கள்
(46)
காதலியை விட்டுக் கொடுத்தைப்போல
தேசத்தை விட்டுக்கொடுக்க முடியாமல்
நான் நிமிரக் காரணம் உண்டு
எனக்கு இருப்பது ஒரே தேசம்..!
(47)
பாரதத்துக்கு
மூன்று புறம் கடல்
நான்கு புறம் கடன்..!
(48)
சந்திரனை தொட்டதின்று மனித சக்தி
சரித்திரத்தை மீறியது மனித சக்தி
இந்திரன்தான் விண்ணாட்டின் அரசனென்ற
இலக்கணத்தை மாற்றியது மனித சக்தி
(49)
கத்தும் பறவை
கனி மரத்தில் வந்து
ஒற்றுமை காட்டிடுதே - தலை
பித்தம் பிடித்தொரு
கூட்டம் தனித்தனி
பேதம் வளர்த்திடுதே
(50)
கொடுமையையும் வறுமையையும்
கூடையிலே வெட்டி வை
கொஞ்சநஞ்சம் பயமிருந்தா
மூலையிலே கட்டி வை
நெடுங்கவலை தீர்ந்ததென்று
நெஞ்சில் எழுதி ஒட்டி வை
நெருஞ்சிக்காட்டை அழித்து - அதில்
நெல்லு விதையைக் கொட்டி வை
(51)
உச்சி மலையிலே ஊரும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது
ஒற்றுமையில்லா மனிதகுலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது
(52)
சேசு முகம்மது என்றும்
சிவனென்றும் அரியென்றும்
சித்தார்த்த னென்றும்
பேசி வளர்க்கின்ற போரில் - உன்
பெயரையும் கூட்டுவர் - நீ
ஒப்ப வேண்டாம் ...
(53)
மனிதரில் நீயுமோர் மனிதன் - மண்ணன்று
இமை திற எழுந்து நில்
தோளை உயர்த்து
சுடர்முகம் தூக்கு
மீசையை முறுக்கு மேலே வந்து
அறிவை விரிவு செய்
அகண்டமாக்கு - மக்களை
அணைந்து கொள்
உன்னைச் சங்கமமாக்கு
மானுட சமுத்திரம் நானென்று கூவு ...
(54)
காடுமேடுகளைச் சீர்திருத்தியே - நல்ல
கழனிகளாக்கியதாரு
கண்ணீரில் பயிர் வளர்த்தே
காசீனிககீந்தது யாரு
வயிறு புடைக்கத் தின்று
மாடியிலே உறங்கும்
மனிதர்களே இதைக் கேளீர் ...
(55)
மழைகூட ஒருநாளில் தேனாகலாம்
மணல்கூட சில நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
அம்மாவென்றழைக்கிற சேயாகுமா?
விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமா?
விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா?
கண்ணாடி உனைப்போல கதை கூறுமா?
இரு கை வீசி உலகாளும் மகனாகுமா?
(56)
எங்கள் அம்மணத்திலிருந்து
உங்கள் பார்வையை மாற்றவே
கைதோறும் கொடி
(57)
அன்று அவன்
சம்பள நாள்
கணக்குப் பார்த்தான்
கடன்கள் போக
மீதியிருந்தவை
கடன்கள்
(58)
வெற்றி உன்னை
அடுதவர்க்கெல்லாம்
அறிமுகப்படுத்தும்
தோல்வியோ
உன்னையே உனக்குள்
ஒருமுகப்படுத்தும்..
(59)
144 எதன் வர்க்கம்
என்று கேட்ட
ஆசிரியருக்கு
12 என்று பதில் சொல்ல
எழுந்த மாணவன்
யோசித்து விட்டுச்
சொன்னான்
'அதிகார வர்க்கம்'
(60)
இங்கே வியாபாரம் செய்ய வந்தார்கள்
அரசியல் நடத்தினார்கள்
அரசியல் செய்ய வந்தவர்கள்
வியாபாரம் நடத்துகிறார்கள்
(61)
போர்வையில்லா
ராப்பிச்சைக்காரன்
குளிர் காய்கிறான்
வயிற்று நெருப்பில்
(62)
உடலைக் கசக்கி
உதிர்த்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுலகு
உழைப்போர்க்கென்பதை
(63)
அரசே
பரிசுச் சீட்டு
விற்பவனுக்கு
பாரத ரத்னா
பட்டம் கொடு
அவன் மட்டும்தான்
எல்லா மாநிலங்களையும்
இணைத்து வைத்திருக்கிறான்
(64)
உழைப்பாளிகள் இந்த தேசத்தில்
சிலைகளில் கூட
உழைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்
தலைவர்கள் இந்த தேசத்தில்
சிலைகளில் கூட
பேசிக் கொண்டுதானிருக்கிறார்கள் ..
(65)
சிறுகச் சிறுக
மரத்தை நாமும்
நம்மை மரமும்
அழித்துக்கொள்வோம்
ஒருதினம் இருவரும்
மறைந்து போக
மிச்சமிருக்கும் இக்
கவிதை மட்டும்
(66)
கடைசி வரிசையில்
சோகத்தோடு
சர்க்கஸ் கோமாளியின் மனைவி
(67)
விருந்தாளி பையில் திராட்சை
நீண்ட பேச்சு
உறங்கிப்போனது குழந்தை
(68)
குடிப்பவன் நேரடியாக
சொர்க்கத்துக்குப் போகிறான்
முல்லாக்கள் குடிப்பதை
எதிர்த்து வருகிறார்கள்
காரணம் வேறொன்றுமில்லை
முல்லாக்களுக்குத் தெரியாமல்
யாரும் சொர்க்கத்துக்குப்
போய்விடக்கூடாது
எனவே யாரும் குடிக்கக்கூடாது ..!
(69)
எத்தனை முறை செத்தாலும்
எழுப்பித் தொலைக்கிறானே
வாக்குச் சாவடிக்கு..!
(70)
எனக்குச் சம்மதமே
நீ
மாலையாய் இருப்பின்
அதில் நான்
மலராய் இருக்க மட்டுமல்ல
நீ பாலையாய் இருப்பின்
அதில் நான்
மணலாய்க் கிடக்கவும்
(71)
மரங்களுக்கு உயிர் உண்டு
என்றபோதிலும்
அவை வெட்டப்படக்கூடாதென்று
நான் சொல்ல மாட்டேன்
இலைகள்
இயற்கைக்கு எழில் கூட்டுகின்றன
இருந்தாலும்
அவை கிள்ளப்படக்கூடாதென்று
நான் சொல்ல மாட்டேன்
கிளைகள்
மரங்களின் கரங்கள்தான்
என்றபோதிலும்
அவை முறிக்கப்படக்கூடாதென்று
நான் சொல்ல மாட்டேன்
ஏனெனில் ........
எனக்கு
ஒரு குடிசை வேண்டும்
(72)
மைதானமெங்கும் மொய்க்கும்
விளையாட்டுக் கூட்டங்கள்
குறுக்கும் நெடுக்குமாய்
கிரிக்கெட் ஆட்டங்கள்
பறக்கும் தட்டுக்களை
துரத்தும் சிட்டுக்கள்
தண்டால் பஸ்கி ஆசனம்
செய்து
கண்ணாடி பார்க்கும்
இளைஞர்கள்
புழுதி படர்ந்த புன்னைகையோடு
கில்லிதாண்டும் சிறுவர்கள்
அத்தனையும் பார்த்தபடி
டியூஷன் போய்க்கொண்டிருக்கும்
சமர்த்துப் பையன்கள்....
(73)
பெருமாள் கோயிலின் முன்
ஏராளமான
பிச்சைக்காரர்கள்
மசூதிகளின் முன்பு
முண்டியடித்தபடி
முசாபர்கள்
மாடி வீடுகளில்
மகிழ்ச்சி குறையாமல்
வாழ்பவர்கள் தமககுள்
வாதிடுகிறார்கள்
ராமர் கோயிலா
பாபர் மசூதியா?
(74)
தனியொரு மனிதன்
பசித்துக் கிடந்தால்
ஒருவர்க்கும் சொல்லாமல்
உடனே நின்று போகும்
ஒரு பூமி வேண்டும்
(75)
கிராமம் நாட்டின்
முதுகெலும்பாம்
அதனால்தான்
கிராமத்தை
அரசாங்கத்தால்
திரும்பிப் பார்க்க
முடியவில்லையோ ?
(76)
மாங்கல்யத்தின் மகிமையை
மனைவி அறிவாள்
மணாளன் அறிவான்
அவர்கள் இருவரையும் விட
மார்வாடியே
அதிகம் அறிவான்
(77)
வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரானே...!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வார்..?
(78)
என்ன வரம் வேண்டும்
என்கிறார் கடவுள்
அது தெரியாத
நீர் என்ன கடவுள்?
(79)
நகைகளை விற்று
வீடு கட்டினேன்
புன்னகை இல்லம்
(80)
கேட்க கேட்க
எவ்வளவு இனிமை
உலை கொதிக்கும் சத்தம்
(81)
சன் டிவி
ஸ்டார் டிவி
எவ்வளவு வந்தாலும்
இன்னும் பலருக்கு
மதிய உணவு
பன் டீதான் ...!
(82)
கல்வி இங்கே
இதயத்தில் சுமக்கும்
இனிமையாய் இல்லாமல்
முதுகில் சுமக்கும்
மூட்டையாகி விட்டது
கொடுமை என்னவென்றால்
குழந்தைகளெல்லாம்
கூனிகளாயினர்
(83)
விதையைப் போல
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியைப்போல
அறையப்படுகிறது
(84)
மொழிபெயர்ப்பு
ஓ மனுஷ குமாரனே
உன் வாழ்க்கை
மகிமை கொண்டதே
மாட்டுக் கொட்டிலில்
பிறந்தாய்
அற்புதம்
மரச் சிலுவை சுமந்து
மரித்தாய்
அற்புதம் ! அற்புதம் !
ஏனிந்த அறியாமை
எதற்காக மீண்டும்
உயிர்த்தெழுந்தாய்?
(85)
மொழி பெயர்ப்பு
மாதர் சூடுவர்
எனக்கு மகிழ்ச்சியில்லை
ராஜாக்களின் போகத்தில்
சந்தோசமில்லை
மதவெறியூட்டும் கற்சிலைகளின்
பூசைக்குப் போகிறேன்
அதிலும் திருப்தியில்லை
தேனீ என்னைச் சுற்றி வருகிறது
சுகமில்லை
விடுதலைக்காக இறந்த
வீரர் கல்லறையில் விழுகிறேனே
அப்போதுதான்
பிறந்த பயனைப் பெறுகிறேன் ...!
(86)
ஒரு முறை
வாழ்வதற்காக
ஒருவன்
எத்தனைமுறை
சாக வேண்டியிருக்கிறது...?
(87)
என் மகன்
பிரசவ் விடுதியிலிருந்தே
ஆங்கிலம்
கற்றாக வேண்டும்
அதனால் நான்
என் மனைவியின்
பிரசவத்தை
இங்கிலாந்தில்
வைத்துக்கொள்ள
ஏற்பாடு செய்து விட்டேன் !
(88)
புத்துணர்வு பெறுவதென்னாள்?
புரட்சிக்குயிர் தருவதென்னாள்?
புயலாய் எழுவதென்னாள்?
புரட்டுலகை தீர்ப்பதென்னாள்?
புத்துலகுப் பொதுவுடைமை
புதுக்கும் நாள் என்னாள்?
புரட்டு முதலாளியத்தை
போக்கும் நாள் எந்நாளோ ?