Monday 16 April 2012அழகர்சாமியின் குதிரை 
ஆனந்த ஜோதி இதழில் என் விமர்சனம் 
எழுதப்பட்டது ஜூலை 2011
(அதற்கு விருது கிடைத்திருப்பது என் விமர்சனத்துக்கு கிடைத்த விருதாக எண்ணி மகிழ்கிறேன்)


சமூக அக்கறையும் நல்ல சினிமாவின் மீது கொண்ட காதலினாலும் புதிய தலைமுறை இயக்குனர்களிடமிருந்து ஒவ்வோர் ஆண்டும் சற்று வித்தியாசமான திரைக் கதைகளோடு தமிழ் சினிமாக்கள் வந்து கொண்டிருக்கின்றன.


அவ்வகையில்

தமிழ் சினிமாவின் பாரம்பர்ய பார்முலாவைக் காலில் போட்டு மிதித்தபடி....
இவர்களெல்லாம் நடிச்சாதான் படம் ஓடும் என்ற மூட நம்பிக்கையின் முதுகை முறித்தபடி...... இதெல்லாம் இருந்தாத்தான் போட்ட காசாவது திரும்பி வரும் என்ற இற்றுப்போன வாதத்தின் இடுப்பை ஒடித்தபடி


ஒரு தமிழ் சினிமா வந்திருக்கிறது.  அது அழகர்சாமியின் குதிரை.


வித்தியாசமான கதையோடும்
அழகான படப்பிடிப்போடும்
இனிமையான இசையோடும்
அழுத்தமான செய்தியோடும்


வந்திருக்கிறது அழகர்சாமியின் குதிரை.


மழை பெய்தல் என்பது இயற்கையோடும் அறிவியலோடும் சம்பந்தப்பட்டது என்று தமிழ் நாட்டில் எந்தக் கிராமத்திலும் போய் நீங்கள் சொல்லிவிட முடியாது.  அது அங்குள்ள சாமியின் அருளால் நடக்கிற சம்பவம் என்பது காலங்காலமாக திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிற ஆத்திகப் பிரச்சாரம். இந்த யதார்த்தத்தை உள்வாங்கிக்கொண்டு அந்தக் கருத்துருவாக்கத்திற்கு அடிமைப்பட்டுப்போன ஒரு கிராமத்தில் இயங்குகிறது கதை.


ஊரில் மழை இல்லை.  அழகர்சாமிக்கு திருவிழா நடத்தினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையோடு திருவிழா துவங்கி ஒவ்வொரு முறையும் சண்டை, அடிதடி, கொலை என்று திருவிழா நின்று போகிறது.  இம்முறை திருவிழாவை எப்படியும் நடத்தினால்தான் ஊருக்குள் குடியிருக்க முடியும் என்ற வாழ்வா சாவா நிலையில் ஏற்பாடுகள் துவங்குகின்றது.  திடீரென திருவிழாவுக்கு முன்னாள் காணாமல் போகிற அழகர்சாமி கோயில் மரக்குதிரையினால் மறுபடி திருவிழா நின்று போகிறது.


Azhagarsamiyin Kudhirai
"ஊம் .... இந்த வருசமும் திருவிழா நின்னு போச்சு ..." என்றவாறே பிழைப்பைப் பார்க்கப் போகிறார்கள் கிராம மக்கள்.  ஆனால்  ஊர்ப் பெருசுகளோ போலீசைப் பார்க்கப் போகிறார்கள்.  ஒன்னாகப் புகாரளித்துவிட்டு தனித் தனியாய்ப் போய் யார் மீது தங்கள் சந்தேகம் என்று இன்ஸ்பெக்டர் காதில் போடுகிறார்கள்.  என்ன செய்யலாம் என்று ஊர்க்கூட்டம் போட்டுப் பேசுகிறார்கள்.  "ஒங்க சாமியாலேயே தன குதிரையைப் பாதுகாக்க முடியலை..." என்ற இளசுகளின் நக்கலுக்கிடையே மலையாள மாந்த்ரீகனை அழைத்து மை போட்டுப் பார்க்க முடிவாகிறது.  மலையில் மூட்டை தூக்கப் பயன்படும் ஒரு நிஜக் குதிரை வழிதவறி ஊருக்குள் வர மலையாள மாந்த்ரீகன் புளுகில் ஊரார்கள் மயங்கி இது அந்த அழகர்சமியே அருளிய வாகனம் என்று குதிரையைப் பிடித்து வைத்துக்கொள்கிறார்கள்.


குதிரையின் சொந்தக்கார இளைஞன் (அவன் பெயரும் அழகர்சாமி) குதிரையைக் கேட்டு வருகிறான்.  ஊரார்கள் தர மறுக்கிறார்கள்.  அவனுக்கும் ஊரார்களுக்கும் ஏற்படும் சண்டையில் போலீஸ் தலையிடுகிறது.  திருவிழா நாள் நெருங்க நெருங்க பிரச்சினை முற்றி குதிரைக்கார இளைஞனின் உயிருக்கே ஆபத்தாகிறது.  பின் மரக்குதிரையைத் திருடியவன் அதை தானே கோயிலில் சென்று வைத்துவிட பிரச்சினைகள் ஓய்ந்து ஒருவழியாய்த் திருவிழா நடக்கிறது.


கிராமிய மணத்தோடு கூடிய இந்தக் கதையை வைத்துக்கொண்டு இயக்குனர் சுசீந்த்திரன் ஒரு அற்புத சினிமாவைப் படைத்திருக்கிறார்.  


அழகர்சாமி கோயில் திருவிழா நடைபெறாமல் இருக்க ஒரு அரசியல் காரணம் இருக்கிறது என்பதைத் துளியும் அறியாத, படிப்பறிவற்ற, வெள்ளந்தியான கிராம மக்கள் தங்களின் வறிய வாழ்க்கைக்கும் அழகர்சாமியின் மீதான (பயம் கலந்த) பக்திக்கும் இடையே அ லைபாய்வதை நிதர்சனமாகப் படைத்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.  பக்தியை விட வறுமை பெரிதாகிவிட்ட நிஜ வாழ்க்கையின் கோரங்களை கோடங்கியின் மனைவி பாத்திரம் மூலம் ஆவேசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  அழகர்சாமி கதாபாத்திரம் அழகு, சிவப்பழகு என்ற நுகர்வோர் கலாசாரப் பைத்தியக்காரத்தனத்துக்கு இயக்குனர் சுசீந்திரன் அடித்திருக்கிறார் சம்மட்டி அடி.


அவன் இவன் என்று சகட்டு மேனிக்குப் பேசும் அந்தக் கறாரான இன்ஸ்பெக்டர் பாத்திரம் அதிகார வர்க்கத்தின் மாதிரிப் படைப்பு.  ஊர்ப் பெருசுகளின் ஆத்திக வெறிக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட  குதிரைக்காரனின் பக்கம் உறுதியாக நிற்க முடியாமல் தவிப்பது அருமையாகப் பதிவாகியுள்ளது.


திருமண நிச்சயத்தில் மலரும் அந்தக் கருப்பு சிவப்பு நிறக் காதலர்களின் காதல் அந்த மலைகளைப் போலவே அழகாகவும், உறுதியாகவும் நிறைவேறுகிறது.  இன்னொரு பக்கம் கலியாணத்தில் முடியும் மேல்சாதி கீழ்சாதிக் காதலும் திரைக்கதைக்கு உள்ளேயே நெய்யப்பட்ட கவித்துவப் பின்னல்.  ஆத்திகம் பேசி அடாவடி செய்யும் மூத்த தலைமுறையும் அதனை ஒன்றும் செய்ய இயலாமல் ஓரமாய் நின்று புலம்பும் இளைய தலைமுறையும் படு யதார்த்தம்.  ஆனாலும் உரிய நேரத்தில் தலையிட்டு தங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றுகிறது அந்த இளைய தலைமுறை.
மேல்சாதி இளைஞன், கீழ்சாதி பெண் காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.  மேல்சாதி இளைஞனின் தந்தையும் ஊர்ப் பிரசிடெண்டுமான நாயக்கர் இந்த ஊரில் இனிமேல் மழையே பெய்யாது; பெய்யக்கூடாது என்று கூவும் வேளையில் மழை பிய்த்க்கொண்டு கொட்டும் அந்த கிளைமாக்ஸ் காட்சி சாமிக்கும், சாதிக்கும் சாட்டையடி கொடுக்கும் முடிவு.  எழுந்து நின்று கைதட்ட வைக்கும் முடிவு.


பாஸ்கர் சக்தியின் எழுதப்பட்ட ஒரு கதையை திரையில் பார்த்துப் பரவசப்ப்படும்படி காட்சியாய்ப் படைத்திருக்கும் சுசீந்திரன் குழுவினருக்கு நல்ல தமிழ் சினிமா ரசிகர்களின் சார்பில் பாராட்டுக்கள்...நன்றிகள்..!

1 comment:

  1. தோழமையுள்ள இளங்கோ அவரகளுக்கு, முதலில் வலைப் பக்கத்துக்குள் தங்களின் வசந்த வரவினை வாஞ்சையுடன் வரவேற்கிறேன். அழகர்சாமியின் குதிரை பற்றியத் தங்களின் அழகிய, அழுத்தமான, ஆழமான கருத்துரை கண்டேன். எதையும் சமுதாய மேம்பாட்டு நோக்கில் ஆய்வுசெய்யும் தங்களின் திறனாய்வு இத்தகு திரைச் சித்திரத்திலும் பொதிந்திருக்கும் பொலிவு கண்டேன். வாழ்த்துகள்.. வழங்குங்கள் கருத்துகளை... வாசித்து மகிழ.. தோழமையுடன் பாவலர் பொன்.க. புதுக்கோட்டை.

    ReplyDelete