Thursday, 5 April 2012

இந்தப் பத்தாண்டின் 
கவிதைகள்


(1) ஒரு எச்சரிக்கை


கவிதைகள் ரெண்டுவகை


கவிதைகள்
கவிதைத் தோல் போர்த்திய
கவிதைகள்


(2) ஒரு வேண்டுகோள்


என்னுடைய
கவிதைக்குப் பரிசாக
ஒரு துப்பாக்கி குண்டு கிடைக்குமானால்
அதற்க்கப்புறம்
என்னை நீங்கள்
கவிஞன் என்றழைக்கலாம்


அதுவரை பொறுத்திருங்கள்
(3) உறக்கம் கலைந்ததும்...... 

கரைகளற்ற நீர்த்துளிக்குள்
இரைதேடி நீந்தி
களைத்து வேர்த்து
இளைப்பாறும் வேளையில்
தூண்டிலில் சொருகிய சொர்க்கம் கவர
கவ்வ விரையும் கனவு மீன்கள்

நட்சத்திரங்களுக்கு நடுவில்
இடுங்கிய இருளை
ஒளிககலப்பையின் கொழுமுனை கீற
இமைகளை அவிழ்த்தால்
அம்மணம் வீசும்
அழுகிய கண்கள்


(4) சுதந்திரம்
விலங்குகள் இல்லை
எனினும் கைதை உணர்கிறேன்


கம்பிகள் இல்லை
எனினும் சிறையை உணர்கிறேன்


வேலிகள் இல்லை
எனினும் காவலை உணர்கிறேன்


சுவர்கள் இல்லை
எனினும் தடைகளை உணர்கிறேன்


கோடுகள் இல்லை
எனினும் எல்லைகளை உணர்கிறேன்


(5) தடங்கள்


கடலின் தரையில் இருக்கிறது
கப்பல் கடந்த தடம்
வானத்தின் தரையில் இருக்கிறது
விமானம் கடந்த தடம்
மனதின் தரையில் இருக்கிறது
அனுபவம் கடந்த தடம்
(6) விளம்பர இடைவேளை


சுதந்திர தின  திரைப்படத்தில்
விளம்பர இடைவேளைக்குப் பிறகே
காந்தி சுடப்பட்டார்


கிறிஸ்துமஸ் தின திரைப்படத்தில்
விளம்பர இடைவேளைக்குப் பிறகே
ஏசு சிலுவையில் அறையப்பட்டார்


பொங்கல் தின திரைப்படத்தில்
அக்கிரமம் செய்பவர்களை
விளம்பர இடைவேளைக்குப் பிறகே
அடித்து நொறுக்கினார்  நாயகன்


என்றோ பார்த்த ஒரு தொடரில் கூட
விளம்பர இடைவேளைக்குப் பிறகே
மாமியாரைக் கன்னத்தில் அறைந்தார்
மருமகள் கோபத்துடன்


விளம்பர இடைவேளைக்குப் பிறகே
எப்போதும் தொடர்கின்றன
செய்திகள்


விளம்பர இடைவேளையில் வருகிறது
சாப்பிட வாங்க......
என்ற மனைவியின் அழைப்பு


விளம்பர இடைவேளையில்
 படிக்கிறார்கள் குழந்தைகள்
விளம்பர இடைவேளையில்
வேறு சேனலுக்கு விரைகிறார்கள்
ரிமோட் கையுடன் இளைஞர்கள்


விளம்பர இடைவேளையில்
நகர்கிறது வாழ்க்கை.....


இந்த விளம்பர இடைவேளைக்குப் பின்
இன்னொரு விளம்பர இடைவேளை வரும்
என்ற நம்பிக்கையுடன்.........!
(7) சொல் போன் 


அழைப்புகள்
சில நேரம் புது மனைவியின்
செல்லச் சிணுங்கலாய்
பல நேரம் பழையவளின்
தொணதொணப்பாய்
எப்படியாயினும்
பேசித் தொலைக்க வேண்டியிருக்கிறது
ஒரு ஒப்பந்ததைப்போல மீற இயலாமல்
கைப்பையிலிருந்து
சட்டைப்பையிலிருந்து
இடுப்பு வாரிலிரிந்து ஒலிக்கிறது
இதயத் துடிப்பைப்போல.........
துண்டிக்கப்பட்டால்
நின்று போகுமோ உயிர் ?


உரத்துப் பேசுபவர்களால்
ஓயாமல் பேசுபவர்களால்
பேசத் தெரியாமல் பேசுபவர்களால்
இறந்து போனது
பேசிப் பேசாமலும்
பேசாமல் பேசியும்
உணரப்பட்ட மௌனம்
புறா விடு தூது
பரிணாம வளர்ச்சியில்
எஸ் எம் எஸ் ஆனதோ?


இளசுகள் வீசும்
செய்திக் குப்பையின் ஊடே
இறந்து கிடக்கிறது
காதல் சுமந்த
புறாவின் சிறகுகள்


மீண்டும் மீண்டும் பேசுபவர்களின்
சொற்களில் சுழல்கிறது
பூமி.........!


(8) புரியாத புதிர்

வறுமையை விரட்டவில்லை
நோய்களைத் தணிக்கவில்லை
வேலையின்மையைப் போக்கவில்லை 
ஊழலை ஒழிக்கவில்லை
விலைவாசியைக் குறைக்கவில்லை
மனித ரத்தம் குடிக்கும் 
ஒரு
கொசுவைக்கூட அழிக்கவில்லை
எதுவுமே செய்யவில்லை
எதுவுமே செய்ததாகத் தெரியவில்லை
என்றாலும் ஏன் வருகிறார்கள்
எனைத் தேடி 
எனப் புரியாமல் விழிக்கிறது
சாமி......


(9) ஏ பார் ஆப்பிள் 
தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு
 25% இட ஒதுக்கீடு 

ஏ பார் ஆப்பிள் 
என்று பாடம் கேட்ட
பள்ளிக் குழந்தை
வீட்டுக்கு வந்தது 

அப்பா அப்பா
ஆப்பிள் வேண்டும்
அம்மா அம்மா 
ஆப்பிள் வேண்டும் என்றது

நான்கு நாளாய்
நச்சரித்த குழந்தையை
தாங்காத தந்தை
கூட்டிப்போனார் கடைவீதிக்கு

அழகழகாய் ஆப்பிள்கள்
அடுக்கி வைத்திருந்த
பழக்கடைப் பக்கம்
பார்த்துச் சொன்னார் 

சிவப்பாய் உருண்டையாய் 
வனப்பாய் வாசமாய் 
அதோ பார்
அதுதான் ஆப்பிள்


கடையில் இருந்த ஆப்பிளை
கையில் வாங்கித் தருமாறு
கத்தத் துவங்கிய குழந்தையிடம்
சத்தம்போட்டார் தந்தை

ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும்
பள்ளிக்கூட வாசலில்
இலந்தப்பழம் விக்கும் அதுவே
இனிக்கும்

வா வா என்று
இழுத்துப்போனார்...!


(10) சம்மந்தப்பட்டவர்களுக்கு.....

மெத்தப் படித்த மேதாவி
ஈடு இணையில்லாத திறமைசாலி
மகா வல்லமை வாய்ந்தவர்

என்றெல்லாம்
உங்களைப்பற்றிக் கூறப்படுவதை
என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது 

நீங்கள்
மெத்தப் படித்த மேதாவி என்றால்
வாழும் மனிதருக்கெல்லாம் சோறிடுங்கள்
நீங்கள்
ஈடு இணையில்லாத் திறமைசாலி என்றால்
எல்லோருக்கும் குடியிருக்க வீடு கொடுங்கள்
நீங்கள் மகா வல்லமை வாய்ந்தவர் என்றால்
வேலை கொடுத்து எல்லோரையும்
வாழ வையுங்கள்

அதுவரை நீங்கள்
மெத்தப் படித்த மேதாவி
ஈடு இணையில்லாத் திறமைசாலி
மகா வல்லமை வாய்ந்தவர்
என்றெல்லாம்
உங்களைப் பற்றிக் கூறப்படுவதை
என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது


(11) நெருப்பென்று தெரியாத நெருப்பு 


ஆதி முதல் 
பசித்த வயிறுகளிலேயே வசிக்கிறது 
நெருப்பு 

எத்தனை கேடுகள் உரசினாலும் 
பற்ற மறுக்கிறது 
கோப நெருப்பு 

நெருப்பு சாட்சியாக 
முறிந்து போகின்றன திருமணங்கள் 

வேள்வி நெருப்பு 
வெறும் 
புகையாகிக் கரைகிறது காற்றில் 

புகையும் சிகரெட்டுகளுக்கே 
அதிகம் பயன்படுகிறது 
தீக்குச்சி நெருப்பு 

சர்க்கஸ் நெருப்பு வளையத்துக்குள் 
புகுந்து வருகின்றன 
வீரமுள்ள நாய்கள் 

உணர்சிகளின் உருமாற்றத்தால் 
பதத்துப் போனது 
மனிதனின் போராட்ட நெருப்பு 

டூன் தமாஷா 
நேசிக்கும் குழந்தைகளுக்கு 
நாம் சொல்ல மறந்தது
வெண்மணியின் நீறுபூத்த நெருப்பு 

நெருப்பிலிடுபவர்களின் 
திமிரை எரிக்கும் நெருப்புக்கு 
இன்னும் தெரியவில்லை
தான் 
நெருப்பு என்று....!

கொஞ்சம் ஹைகூ

தாயின் தாலாட்டுக்கு
தொட்டிலில் தூங்கும்
இசை

டியுபுக்குள் 
காற்று மட்டுமல்ல
குழந்தையும் இருக்கிறது 

கழுவி வைத்திருங்கள்
தட்டை
சுத்தம் சோறுபோடும்

சர்க்கரை விலையை
குறைக்கச் சொல்லி
எறும்புகள் ஊர்வலம் 

பனை மரங்கள்
கியூவில் நிற்கின்றன
காற்று வாங்க 

உன் மௌனத்தை 
மொழிபெயர்க்கிறது 
உன் பார்வை

எப்படித் தழுவ முடியும்
என்னில் கலந்த
உன்னை 


......

2 comments: