Wednesday 2 May 2012

மறைந்த கவிஞர் பாலா பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு 
ஆனந்த ஜோதி மே 2010 இதழில் வெளிவந்தது......
1984.  த மு எ ச (இப்போது த மு எ க ச) இலக்கியக் கூட்டம் ஒன்றிற்கு
என்னைக் கவிதை வாசிக்க அழைத்திருந்தார்கள்.  கூட்டத் தலைமை
கவிஞர் கந்தர்வன்.  கவிதை வாசித்து முடித்ததும் அக்கவிதை 
குறித்து வந்திருந்தவர்கள் கருத்துச் சொல்லிக்கொண்டு வந்தனர்.
"நல்லாயிருந்தது...,  இந்த வரிகள் சிறப்பாக இருந்தன..." என்று 
எல்லோரும் கவிதை குறித்த தங்கள் விமர்சனங்களைச் சொல்லிக் 
கொண்டிருந்த பொழுது பாலாவின் முறை வந்தது.  பாலா சொன்னார்.
"இவருக்குக் கவிதை வரும்..." அவருடைய ஆசியினாலும். த மு எ ச 
தோழர்களின் ஊக்குவிப்பினாலும் தீக்கதிர், செம்மலர் இதழ்களில் 
தீவிரமாக கவிதை, சிறுகதை, கட்டுரை என எழுதிக் கொண்டிருந்தேன்

இயல்பான சினிமா ஆர்வத்தினால் திருச்சி சினி போரம் தோழர்களோடு 
தொடர்பு ஏற்பட்டு அவர்களுடைய திரையிடல்களுக்குச் சென்று வந்தேன்.

1986 இல் புதுக்கோட்டையில் ஒரு திரைப்பட சங்கத்தை நிறுவுவதென 
தீர்மானித்துச் செயலில் இறங்கியிருந்தோம்.  பல தரப்பிலிருந்தும் ஆதரவு.
அப்போது மன்னர் கல்லூரியில், ஆங்கிலத் துறையில் பணியாற்றி வந்த 
கவிஞர் பாலா அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உதவி செய்தார்.  மன்னர் 
கல்லூரி, அருகிலிருந்த பி எட கல்லூரியைச் சேர்ந்த விரிவுரையாளர்கள், 
பேராசிரியர்கள் பலரிடம் என்னைக் கூட்டிக்கொண்டு போய்
அறிமுகம் செய்து வைத்தார்.  உறுப்பினர்கள் சேர்த்துக் கொடுத்தார்.

16 எம் எம் 35 எம் எம் பிரிண்டுகளைக் கொண்டு வந்து ஓட்டல் அரங்கு, 
கல்லூரி அரங்கு, சினிமா தியேட்டர் எனப் பல இடங்களில் நல்ல 
திரைப்படங்களை உறுப்பினர்களுக்கு காட்டி வந்தோம்.

உறுப்பினர்களில் பலர்,   "நாயகன்-நாயகி-காதல்-பாட்டு-நடனம்-வில்லன்-
சண்டை"  என்ற தமிழ் இந்தியின் பார்முலாப் படங்களையே பார்த்துப் 
பழக்கப்பட்டவர்கள்.  

சினிமா என்ற காட்சி ஊடகத்தின் வழியாக, மனிதர்களது 
மெய்யான வாழ்க்கையினை, அவர்களது அசல் உணர்சிகளை, 
நேர்த்தியான காட்சி  அமைப்பில், இசையோடு, படத்தொகுப்பு
உத்திகளோடு, இயல்பான  வசனங்களோடு பார்வையாளன்
முன்வைத்த வித்தியாசமான படங்களை  அப்போதுதான் அவர்கள் 
பார்க்கத் துவங்கினார்கள்.

பலவகைப்பட்ட ஐரோப்பிய, ஆசியத் திரைப்படங்களைக் காண்பித்து
மெல்ல மெல்ல உண்மையான சினிமா எதுவென்று அவர்களை உணர
வைத்தோம்.  சினிமா பார்ப்பது மட்டுமல்லாமல் அது குறித்துப் பேசுவது
விவாதிப்பது திரைப்பட சங்கத்தின் முக்கிய நோக்கம்.  இங்குதான்
கவிஞர் பாலாவின் விமர்சனத் திறன் எங்களுக்குப் பேருதவியாக இருந்தது.
இலக்கிய உலகில் தேர்ந்த விமர்சகராகத் திகழ்ந்த பாலா, திரைப்
படங்களையும் சிறப்பாக விமர்சனம் செய்வார்.  சிறுகதைகளை,
நாவல்களை அடிப்படையாகக் கொண்ட நிறைய பிரெஞ்சு, ஜெர்மன்
சினிமாக்கள் பற்றி அவர்தான் விளக்கிப் பேசுவார்.  சினிமா பற்றிய எங்கள்
அறிவை விசாலப்படுத்தியதோடு, சினிமா அழகியல் குறித்து கற்க
எங்களுக்கு வழிகாட்டினர் என்றே சொல்லலாம்.

ஒவ்வொரு திரைப்படக் காட்சிக்குப் பின்னரும் பாலா என்ன சொல்லப்
போகிறார் என்று நாங்கள் காத்திருப்போம்.  அன்றைய சினிமாவின்
அழகியல்பூர்வமான விசயங்களை, அருமையாக நினைவில் கொண்டுவந்து
உணர்வுபூர்வமாக விவரித்துச் சொல்வார்.  கரகரத்த குரலில் அவர் ஆற்றிய
திறனாய்வு உரைகளை மனதில் அசைபோட்டவாரே  வீடு திரும்புவோம்.

திறனாய்வுத் துறைக்கு கவிஞர் பாலா இன்னும் நிறையச் செய்திருப்பார்.
அவர் உயிரோடு இருந்திருந்தால்.......!

No comments:

Post a Comment